Wednesday, April 20, 2011

கல்கி - கோடைவிடுமுறை மட்டுமல்ல என்றுமே குதூகலமாக படிக்க வேண்டிய புத்தகங்கள்


கல்கியின் பொன்னியின் செல்வன்

கல்கியின் சிவகாமியின் சபதம்

கல்கியின் பார்த்திபன் கனவு


பொன்னியின் செல்வன்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழசாம்ராஜ்யத்தின் வரலாறு ..............

இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்க்கும் வீரமிகு தமிழ் சமுதாயத்தின் வரலாறு   கல்கியின் கைவண்ணத்திலே ...................

சுந்தரசோழரின் மூத்த மகனான
ஆதித்தகரிகாலனின் மர்மம் நிறைந்த மரணம். ராஜராஜ சோழனாக உருவெடுத்த பொன்னியின் செல்வன், தோழமையுடன் வந்தியதேவன்... இவர்களுடன் வானதியும் குந்தவையும் .........
கடல் இளவரசியாக பூங்குழலியும் , மர்மசூழலின் மத்தியில் நந்தினி......... வீரபழுவேட்டயர்கள் ,
கட்டிகாத்த முதன் மந்திரி அநிருத்தபிரமராயர் வைணவஆழ்வார்கடியான்,  மணிமேகலை ............. இவர்கள் அனைவரும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தமிழ் சமுதாயத்தில் வாழ்வார்கள்.....

சிவகாமியின் சபதம்
முன்னும் அவனுடய நாமம் கேட்டால்...
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டால்...
திருநாவுகரசனின் திருப்பதிகத்துக்கு அபிநயம் பிடித்த .... அபிநய சுந்தரி சிவகாமி தன் சபதத்தை முடித்தாளா.........?
பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் மாமல்ல சக்ரவர்த்தி சிவகாமியின் சபதத்தை முடித்துக் கொடுத்தாரா...!

சிவகாமியின் 
கண்களில்........................ 
 
பார்த்திபன் கனவு
சோழசாம்ராஜ்ஜியத்திற்க்கு வித்திட்ட பார்திபசோழனின் கனவு........... முன்று நூற்றாண்டுகளுக்கு பிறகு சோழநாட்டின் வீரசிம்மாசனம் ஏறிய ராஜராஜ சோழன், அவனுடய புதல்வனான ராஜேந்திரசோழன் இவர்களுடைய காலத்தில் நனவானது.

Monday, April 18, 2011

நாஞ்சில் நாடன்............ படைப்புகள்.............



அரசியலும் அதிகாரமும் கட்டவிழ்த்துவிடும் சமூக அநீதிகளைச் சகித்துக்கொண்டு சுரணை கெட்டுக் கிடக்கும் தமிழ்ச்சமூகத்தின்
அற உணர்வைத் தட்டி எழுப்புவதை தன் எழுத்தின் காரியம் என்று உறுதி கொண்டிருப்பவர்
நாஞ்சில் நாடன் ......
மண்ணில் இருந்தும் மனிதரிலிருந்தும் முளைத்து எழுபவை அவரது கதைகள்.......
நிராகரிப்பின் துயரிலிருந்து திரண்டு எழுவது அவரது மொழி ..... அவரது மெய்யான வாசகன் அவருடைய  ஒவ்வொரு படைப்பையும் படித்துமுடித்தவுடன் தலை குனிவையே அடைவான் ..............
இதுகாறும் சமூகம் சார்ந்தும் சகமனிதர்கள் சார்ந்தும் பொறுப்பின்மையுடன் நடந்து கொண்டமைக்காக உள்ளூர வருந்துவான்.
 வாசகனின் இந்த சுயபரிசீலனையை சாத்திய படுத்துவதால்தான் நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள் இலக்கியமாக ஆகின்றன....

நன்றி - ”மணல்கடிகை - எம் கோபாலகிருஷ்ணன்” ................ சூத்திரதாரி.


நாவல்கள்
தலைகீழ் விகிதங்கள்
 என்பிலதனை வெயில் காயும்
மாமிச படைப்பு
மிதவை
சதுரங்கக் குதிரை
எட்டுத்திக்கும் மதயானை

 சிறுகதைகள் 
தெய்வங்கள் ஒநாய்கள் ஆடுகள்
வாக்குபொறுக்கிகள்
பேய்க்கொட்டு
பிராந்து
முத்துக்கள் பத்து
நாஞ்சில் நாடன் கதைகள்
சூடிய பூ சூடற்க - சாகித்திய அகாதமி பரிசுபெற்ற நூல்
கான் சாகிப்


கட்டுரைகள்
நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை
காவலன் காவான் எனின்
தீதும் நன்றும்
திதம்பரம்

கவிதைகள் 
                                     மண்ணுள்ளிப் பாம்பு
                                     பச்சைநாயகி


  ம்பராமாயணக் காவலர் 
நாஞ்சிலாரின் எழுத்துப்பணி தொடரும்................
www.nanjilnadan.wordpress.com






Saturday, April 2, 2011

கடவு - திலீப் குமார்


பதினாலு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.........
ஒவ்வொன்றும் சிறுகதை உருவத்துக்கு அப்பார்ப்பட்ட இலக்கிய அனுபவத்தை தருபவை.
இவருடய நகைச்சுவை தனிரகம்.
வறுமை, சிறுமை, கோபம்,பசி,குழப்பம்.......
இவையெல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையவை. ஒரு தனிகாரணம் என்றில்லாமல் பல பன்புகளின் தனித்துவமான சேர்க்கையால் இவருடய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன......

நன்றி ..........அசோகமித்திரன். 



மறுபக்கம் - பொன்னீலன்


இன்னொரு புதிய தரிசனம்,குமரிமாவட்டத்தின் மண்வாசனையை நுகரதந்தபடியே அம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை செதுக்கித்தருகிறது.
நாட்டார் கதைகள், நாட்டார் மரபுகள் என பழையாற்றின் வெள்ளம்போல் குருத்தோலை மணத்தோடும், நுரை பொங்கும் கள்ளின் காரத்தோடும், மீனின் சுவையோடும் ஒரு நாவல்........

ஜெயமோகனின் புத்தம் புதிய த்ரில்லர் “உலோகம்” - வரவேற்க்கிறோம்

                                                     உலோகம் - ஜெயமோகன்


உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் உணரவேண்டிய தருணத்தை உருவாக்குகிறார் ஜெயமோகன். துரோகம் கதையில் ஒரு முடிச்சை உருவாக்குகிறது. இன்னொரு துரோகம் அம்முடிச்சை அவிழ்த்துவிட்டு, வேறு ஒரு முடிச்சைப் போட்டு வைக்கிறது. இப்படியாக இந்த திரில்லர் கதை செல்லும் ஆழம் அசர வைக்கக் கூடியது. ஈழத்தோட தொடர்புடைய அரசியல் இக்கதையின் களமாக இருப்பதால், புனைகதையை உண்மைக்கு வெகு அருகில் நின்று நம்மால் பார்க்கமுடிகிறது.

கிருஷ்ணா........கிருஷ்ணா......... இந்திரா பார்த்தசாரதி

 கிருஷ்ணன், கிருஷ்ணனாகப் பிறக்கவில்லை ...... உருவாக்கப்பட்டான்......................

இந்திரா பார்த்தசாரதியின் "கிருஷ்ணா கிருஷ்ணா', மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை. இ.பா.வின் இந்நாவலில் உங்களுக்கு திரேதாயுகத்துக் கிருஷ்ணனும் தெரிவான்; 21-ஆம் நூற்றாண்டுக் கிருஷ்ணனும் தெரிவான். காலம் கடந்தவன் என்பதால் அல்ல; காலமாகவே நிற்பவன் என்பதால்தான். கிருஷ்ணர் என்கிற பாத்திரம் எந்த ஒரு தனிப்பட்ட ஆசிரியராலும் படைக்கப்பட்டதல்ல; அது ஒரு சமுதாயக் கனவு என்று இ.பா. சொல்கிறார். அந்தக் கனவின் சமகால நீட்சி, இந்த புத்தகம்......

தலைமுறைகள் - நீல பத்மநாபன்

நீல.பத்மனாபனின் தலைமுறைகள் எனும் நாவல் நாகம்மை எனும் பெண்ணைச் சுற்றிச் சுழன்றாலும், அதனுடைய பரப்பு ஒரு மூன்று தலைமுறைகளை உள்வாங்கிக் கொண்டு உருவாகி அமைகிறது. அதுபோல, குறிப்பிட்ட ஒரு குடும்பம் மட்டுமல்லாமல் தொடர்புடைய பல குடும்பங்கள் புனையப்படுகின்றன. ஒரு குடும்பத்தில் நாகம்மை, திரவி ஆகியோர் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர் என்றால், நாகருப்பிள்ளை இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர்.உண்ணாமலையாச்சி மூத்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவள். இம்மூன்று தலைமுறையினரும் ஒரே குடும்பத்தில் இணைந்து வாழ்கின்றனர். அது ஒரு சிறிய குடும்பம். ஆனால் அதுதான் நாவலின் தலைமையான குடும்பம். இதனோடு இணைந்து வருவது உண்ணாமலை ஆச்சியின் அண்ணாச்சி கூனாங்காணிப் பாட்டாவின் குடும்பம். அவருக்கு இரு மனைவிகளும் , வெளியே ஒரு வைப்பாட்டியும் உண்டு. மூவர் வழியாகவும் பிள்ளைகுட்டிகள், பேரன் பேத்திகள் உண்டு. இந்த இரு குடும்பங்களுமே நாவலின் முக்கியமான குடும்பங்களாகும்.  உறவால் மட்டுமல்லாது கதைப் போக்கின் இணைவினாலும், முக்கியத்துவத்தினாலும் அவை பிணைப் புடையவை. மூத்த தலைமுறைகளைச் சித்தரிக்கின்ற மூன்றாவது குடும்பம், நாகம்மையின் தந்தை நாகருப்பிள்ளையின் மாமனாராகிய பத்மனாபப் பாட்டாவின் குடும்பமும், இந்தச் குடும்பங்களின் வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்தவர்களும், ஒரே சமூகத்தில்(அதாவது ஏழூர்ச் செட்டியார்கள் சமூகத்தில்) ஒரே காலகட்டத்தில் வாழ்பவர்கள் என்றாலும் மாறுபட்ட வாழ்க்கைப் போக்குகளையும், வாழ்க்கை மதிப்புகளையும் கொண்டவர்கள்.

எனது நூலகங்கள் – எம்.கோபாலகிருஷ்ணன் - சூத்ரதாரி


கோவை நகரை அறிந்தவர்களுக்கு ரத்தின சபாபதி புரத்தின் மையமான திருவேங்கடசாமி சாலையின அழகையும் குளுமையையும் குறித்துச் சொல்லத் தேவையில்லை. அகன்ற 60 அடி சாலை. இருமருங்கும் செழித்து வளர்ந்த அடர்ந்த மரங்கள். பல இடங்களில் சாலை மொத்த்த்தையும் கிளைகள் வளைத்து மூடியிருக்கும். நிழலின் மெல்லிய இருளில் நிதானப்பட்டிருக்கும் இந்தச் சாலையில்தான் தியாகு புத்தக நிலையம் அமைந்துள்ளது. பல வருடங்களுக்கு முன்னரே நான் திருப்பூரிலிருந்த சமயத்திலேயே தியாகு புத்தக நிலையம் குறித்து நண்பர் ஒருவர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். புத்தகங்களைத் தேடி அலைந்துகொண்டிருந்த காலம். சனிக்கிழமைதோறும் கோவைக்குச் சென்றுவிடும் கெட்ட பழக்கம் கோவையில் கேஜி தியேட்டரில் அப்போது தரமான மலையாளப் படங்களைப் பார்க்க முடியும். ஒரு சினிமா பார்த்துவிட்டு, டவுன்ஹாலில் பழைய புத்தகக் கடையில் சில மணி நேரங்கள் செலவாகும் (இப்போது அந்தக் கடைகள் உக்கசத்திற்குச் சென்றுவிட்டன. ஆனால் இங்கே கிடைத்த பல புத்தகங்கள் அங்கே இல்லாமல் போய்விட்டன.) அங்கிருந்து சாய்பாபா காலனி. அங்கே இரண்டு புத்தகக் கடைகள் இருந்தன. அங்கே ஒரு மணிநேரம் தேடவேண்டியது. பிறகு லாலி ரோடில் இருக்கும் மைய நூலகத்திற்குச் சென்று கொஞ்ச நேரம். இரவு ஊர் திரும்ப வேண்டியது. ஆனால் அந்தக் கால கட்ட்த்தில் தியாகு புத்தகக் கடையை எப்படியோ நான் தவறவிட்டுவிட்டேன்.
பிறகு நான் கோவைக்கு மாற்றலாகி வந்தேன்.  மணல் கடிகைநாவல் வெளியாகி சில மாதங்கள் ஆகியிருந்தன. ஆர்.எஸ்.புரத்தில்தான் என் அலுவலகம். ஒரு நாள் மாலை நான் தியாகு புத்தகக் கடைக்குச் சென்றேன். புத்தக அடுக்குகள் கொண்ட மேசைக்குப் பின்னால் இருந்தவர் வாடிக்கையாளர்களைக் கவனித்து கொண்டிருந்தார். புத்தகங்களைக் குறித்தும் வாசிப்பது குறித்து நிறைய வாசகங்களைப் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வித்த்தில் எழுதி மாட்டப்பட்டிருந்தன. நல்ல புத்தகங்கள் நாம் வாசிக்கும் போதே நம்மையும் வாசிக்கச் செய்கின்றனஎன்று நான் ரசனைஇதழில் ஒரு நூல் விமர்சனத்தில் எழுதியிருந்த வாசக மொன்றும் அந்த வரிசையில் இருந்த்து.
எனக்கு என்ன வேண்டும் என்று தியாகு கேட்ட போது, அந்த வரிகளைச் சுட்டிக் காட்டி யார் எழுதியது சார் இது என்று கேட்டேன். இதழைக் குறித்தும், புத்தக விமர்சனம் குறித்தும் அதை எழுதியது ஒரு நாவலாசிரியர், கோபாலகிருஷ்ணன் என்று பெயர் என்று விவரமாகச் சொன்னார். நான் தான் அந்த கோபாலகிருஷ்ணன்என்று மெல்ல சொன்னேன். இருக்கையிலிருந்து எழுந்து, ஈரம் மினுங்கிய உள்ளங்கைகளால் என் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டார். என் நாவல் குறித்தும் அந்த நாவலைப் பலருக்கும் பரிந்துரைத்த்து குறித்தும் உற்சாகமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

தியாகு புத்தக நிலையத்தை ஏறக்குறைய 30 ஆண்டுகளாக நட்த்திவரும் தியாகராஜன் அடிப்படையில் ஒரு நல்ல வாசகர். புத்தகங்களின் மீது அளவற்ற பிரியம் கொண்டவர். இதைத் தவிர எனக்கு வேறெதுவும் தெரியாதேஎன்று அவ்வப்போது சொல்லும் அளவிற்கு புத்தகங்களோடு ஒன்றிப் போனவர். ஒரு லெண்டிங் லைப்ரரி என்ற அளவில்  அதை அணுகினாலும்கூட அங்கிரிக்கும் புத்தகங்களின் வகைப்பாடு நம்மை பிரமிக்கச் செய்பவை. தமிழ் புத்தகங்களைக் காட்டிலிம் ஆங்கிலப் புத்தகங்கள் அதிகம். வாசகர்கள் அதிகமும் கேட்கும் பிரபல ஆங்கில நாவலாசிரியர்களோடு சேர்த்து மார்க்வெஸ்ஸையும்,சரமகோவையும், குந்தர் கிராச்ஸையும் பார்க்க முடியும். ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் எல்லா நூல்களையும் இங்கே பார்க்க முடியும்.ராமசந்திரகுகா, அஸ்கர்அலிஎஞ்சினியர்
குஷ்வந்த சிங், அருந்ததி ராய், என்று ஆங்கிலக் கட்டுரைகளை அங்கே நான் பார்த்திருக்கிறேன். அரசியல், ஆன்மிகம், விளையாட்டு, சோதிடம், வானவியல், சுயசரிதம், சமையல், அழகுக்கலை என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் புத்தகங்கள் இடம் பெற்றிருக்கும். யாராவது ஒருவர் புதிய நூல் ஒன்று வெளியாகியிருப்ப்து குறித்து வந்து சொன்னால் அடித்த சில நாட்களில் அது தியாகுவின் கடையில் கிடைக்கும். நல்ல ஒரு புத்தகத்துக்கு நிறைய வாசகர்கள் உண்டு என்றால் கூடுதல் பிரதிகளை ஏற்பாடு செய்வார். அவருடைய நூலகத்துக்கு வரும் வாசகர்களின் ரசனையை அறிந்து அவர்கள் விருப்பத்திற்கேற்ற புத்தகங்களை அறிமுகம் செயவார். அவருடைய வாசகர்களில் பலர் தேர்ந்த படிப்பாளிகள். அந்த ரசனையை வள்ர்த்தெடுத்ததில் தியாகுவிற்குப் பெரும் பங்கு உண்டு. குழந்தைகளுக்காக என்று தனியாக ஒரு பிரிவு உண்டு.
தியாகுவிற்கு அந்தப் புத்தக நிலையம்தான் தொழில். ஒரு தொழிலாக மட்டும் அதைத் திறம்பட நட்த்துவது என்பது இப்போதைய காலகட்ட்த்தில் கடினமாவது. ஆனால் புத்தகங்கள் மீதான அவருடைய ஆழமான உறவு வியாபார நோக்கத்திலான லாப நட்டங்களைப் பொருட்படுத்தாத ஒரு பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற ஒரு உணர்வுநிலை தொழில் சார்ந்த கணக்குகளிக்கு எதிரானது. எப்போதுமே  லாபநஷ்டங்களைப் பார்க்காத சிலரின் அக்கறைகளே சமூகத்திற்கு மேன்மையான விஷயங்களைச் சாத்தியப் படுத்துக்கின்றன. புத்தகங்களின் மீதான அந்த உற்வைத் தியாகுவின் கடையில் உள்ள புத்தக அடுக்குகளைப் பார்த்தாலே தெரியும். மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படும் நூல் நிலையம் அது. மிக லேசாக எப்போதும் ரமண மந்திரம் ஒலிக்கும் அந்தச் சூழல் புத்தகங்களைத் தேடுபவர்களுக்கு இதமான ஒன்று.
தியாகுவிற்கு, தான் வாங்கி வைத்திருக்கும் சில நூல்களுக்கு ஒரு வாசகர்கூட இல்லை என்று தெரியும். புத்தம் புதுசாக அது அப்படியே தட்டில் உட்கார்ந்திருக்கும். ஆனாலும் அதைத் தெரிந்துதான் வாங்கியிருப்பார். இருக்கட்டுமே,யாராச்சும் படிக்காமயா போயிருவாங்கஎன்று சிரிப்பார்.
தியாகுவின் நூல் நிலையம் கோவையின் மிகத் தரமான வாசகர்கள் ஒன்றுகூடும், முக்கியமான ஒரு புள்ளி. திட்டமிடப்படாத சந்திப்புகள் பலவற்றில் அப்படியான பல்வேறு நண்பர்களை நான் சந்தித்ததுண்டு. எழுத்தைக் குறித்தும் வாசிப்பைக் குறித்துமான பல கேள்விகளுக்கான ஆழமான பதில்களைத் தந்த உரையாடல்கள் பலவும் சாத்தியப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நாள் என்று எதுவுமில்லாது, ஒரு தொலைபேசிச் செய்தி வழியாக நண்பர்கள் மாலையில் ஒன்று கூடிப் பேசிக்கொள்வோம். அன்னபூர்ணாவின் காப்பி சுவைக்கு தியாகு அடிமை (தனிக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்) காப்பிக்குபிறகு நூல் நிலைய வாசலில் நின்றபடியே உரையாடல் நெடுநேரம் தொடரும். புகைப்பட்த்துறை, உலக சினிமா, வாசிப்பு, சுற்றுச்சூழல், கானுயிர், தொழில்நுட்பம் என்று அவரவர் துரையில் முக்கியமான பங்களிப்புகளை, வெளியே தெரியாமல் தம்பட்டம் அடிக்காமல், செய்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். இவர்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கும் புள்ளி வாசிப்பும் தியாகு புத்தக நிலையமும்தான்.

புத்தக அறிமுகம்,விமர்சனம்,வெளியீடு விழா போன்ற சம்பிரதாயங்களில் அசலான வாசகர்களை நாம் சந்திக்க முடியாது. நல்ல ஒரு வாசகன் இதுபோன்ற இடங்களைவிட்டு ஒதுங்கி ஓடுபவன். அத்தகைய நல்ல வாசகர்களை த்யாகு புத்தக நிலையம் போன்ற இடங்களில்தான் நாம் பார்க்க முடியும். ஒரு மாலைநேரத்தில் தனக்குத் தேவயான புத்தகத்தை மிகப் பொறுமையாகத் தேடி எடுத்துச் செல்பவன் அவன். அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது அவனால் சொல்லப்படும் மிகச் சில சொற்களே அந்தப் புத்தகத்தைக் குறித்து உண்மையான விமர்சனமாக இருக்கும். எழுத்தாளனின் காதில் அவை விழாமலேகூடப் போகலாம். ஆனால் அந்தப் புத்தகத்தின் இருப்பை அர்த்தப்படுத்துவதும் கேள்விக்குள்ளாக்குவதும் அந்தச் சில சொற்களே.

த்யாகு புத்தக நிலையத்தின் வாசலில், மரங்களின் கிளைகள் மிக மெதுவாக அசைந்திருக்க, வாகனங்களின் முகப்பு விளக்குகளின் ஒளி பட்டும் விலகியும் ஒட, நண்பர்களிடம் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது பல சமயங்களில் எனக்கு அத்தகைய சில சொற்கள்தான் உரத்து ஒலிப்பது போல இருக்கும். அன்றிரவு என்னை எழுதவோ, எழுத முடியாமலோ செய்பவை அச்சொற்களே!

ஒரு வாசகனாக என்னை உருவாக்கிய பாதைகளைத் திரும்பிப் பார்க்கும் இந்த முயற்சியில் நான் சொல்லியிருப்பவை கொஞ்சமே. ஒவ்வொரு வாசகருமே இதுபோன்ற பாதைகளின் வழியாகத்தான் கடந்து வந்திருப்பார்கள். ஏதாவது ஒரு நூலகம், யாராவது ஒரு நண்பர் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் நம்மை அவ்வாறு திசைமாற்றியிர்ப்பார்கள். நாமும் அப்படி யாருக்கேனும் ஒரு திசை மாற்றத்தைச் சாத்தியப்படுத்த முடியுமானால் அதுவே நாம் கடந்து வந்த பாதைகளின் பொருளாக அமையும்.


          சூத்தரதாரி எம்.கோபாலகிருஷ்ணன்  மணல் கடிகை

திட்டமிடப்படாத உணர்தல்தான், அடையாளம் காணப்படும் நல்ல வாசகன்......
அந்தகனம் தரும் நிறைவு உணர்பவர்களுக்கே புரியும்.
புரிதலுடன் பதியப்பட்ட எழுத்துக்களின் கோர்வை, வார்த்தை ராகங்களாக மனதினில் நிறைவையும் , நெகிழ்வையும் தந்தது..........

     ப்ரியங்களுடன்
     த்யாகராஜன்.

த்யாகு புக் சென்டரில் ஜெயமோகன்…........


எங்கள் நூலகத்திற்க்கு வருகைபுரிந்த ஜெயமோகனுடன் சில மணித்துளிகள்.........

எண்ணிலடங்கா எழுத்து தச்சர்கள் செதுக்கிய புத்தகங்களின் நடுவே புன்னகையுடன் ஜெயமோகன்,  


20-12-2010 திங்கள் காலையில் உற்சாகத்துடன் த்யாகு புக் சென்டருக்குள் புகுந்தேன், விளக்கேற்றி சாமிகும்பிட்டு நெற்றியில் திருநீரிட்டு வேலைகளை ஆரம்பித்தேன். முதல் காரியமாக த்யாகுசாருக்கு தொலைபேசியில் அழைத்தேன், அன்று அவர் திருவண்ணாமலை போகவில்லை, 10 மணிக்கு த்யாகுசாரும்,சுரேஷ்சாரும் நூலகத்திற்க்குள் வந்தார்கள், விஷ்ணுபுரம் விருதுவிழாவை பற்றி அபிபிராயங்கள் இரண்டு பேரும் பகிர்ந்து கொண்டார்கள். அப்போதுதான் தெரிந்தது ஜெயமோகன் ஊரில் இருக்காங்க என்று... தெரிந்தவுடன் த்யாகு புக் சென்டருக்கு அவரை அழைத்து கொண்டுவர முடிவாயிடுச்சு, சந்தோஷத்துடன் நானே அவரை அழைத்து வருகிரேன் என்ற பொறுப்பை ஏற்று கொண்டார் சுரேஷ்சார்.... அவர் ஜெயமோகன் பேச்சுக்கு அடிமையானவர்.... இரண்டு தினங்களாக வேலைக்கும் வீட்டுக்கும் போகாமல் அவருடனே இருக்கிறார்.
ஜெயமோகன் வருகிறார் என்று தெரிந்தவுடன் சுறுசுறுப்பாக வேலைகள் ஆரம்பமாகிவிட்டன, த்யாகுசாரின் நண்பர்கள் கூட்டத்திற்க்கும் அழைப்புக்கள் சென்றுவிட்டன. இருக்கைகள் எடுத்து துடச்சு அடுக்கப்பட்டன. 11 மணிக்கு டான் என்று வந்து சேர்ந்தார் நண்பர் செல்வேந்திரன், அவர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் உறுப்பினர், அவரும் எங்கள் வேலைகளில் பங்குகொண்டார், இனிப்பும், காரமும் வாங்கி வந்தார் த்யாகுசார்..........
11.30 மணிக்கு ஜெயமோகனைக் காண ஆர்வத்துடன் வந்தார் எங்கள் கலைவாணி அக்கா, அதற்க்குப்பின் மித்திரன் சார் அவர்களும் வந்துசேர்ந்தார், மற்ற நண்பர்களை அவரே தொலைபேசியில் அழைத்தார், ஆனந்துசாரின் மாணவன் அருண் வந்தார்...
அமைதியாக வந்து அமர்ந்தார் உலக புகழ்ப்பெற்ற புகைப்பட நிபுணர் ஜெய்ராம்சார் அவர்கள்,  கோணங்கள் பிலிம் சொசைடியில் இருந்து ஆனந்த் சார் வந்திருந்தார்,       
பாலு என்கிற கோயமுத்தூர் பாலசுப்ரமணியம் அவர்களும் வந்து சேர்ந்தார், இதுக்கு எதற்க்கும் சம்பந்தமில்லாமல் யதேச்சையாக வந்து மாட்டி கொண்டார் நம்ம மாதவன்சார் அவங்க..... மற்றவர்களும் வந்து சேர்ந்துவிட்டார்கள்.

    நூலகத்திர்க்குள் புத்தகம் எடுப்பவர்களின் கூட்டம் ஒரு பக்கம் நண்பர்கள் கூட்டம் ஒரு பக்கம் என திருவிழாக்கோலம் பூண்டது எங்கள் நூலகம்...........

ஜெயமோகனை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள். அவரை கூட்டிகொண்டுவரும் பொருப்பை ஏற்று இருந்தார் சுரேஷ்சாரும், சிவகுமார்சாரும், 12.30 மணியளவில் நூலகத்திற்க்குள் வந்து சேர்ந்தார் எங்கள் விழா நாயகன்
திரு.ஜெயமோகன் அவர்கள்.
உற்சாகத்துடன் வரவேற்றார் எங்கள் த்யாகுசார், அவரின் முகத்தில் ஒரு சின்ன குழந்தையின் குதூகலம் எங்களை அறிமுகப் படுத்தினார்.......
நூலகத்தை முதலில் சுற்றி பார்க்க கிள்ம்பி விட்டார், அவசரமில்லாமல் நிதானமாக ஒவ்வொரு ராக்கையும் பார்த்து கொண்டுவந்தார், அவருடன் வேறு சில நண்பர்களும் இருந்தார்கள். நிதானமாக வந்து உக்காந்து பேச்சை ஆரம்பித்தார், கூடவே இனிப்பும் காரமும், டீயும் பகிர்ந்து கொண்டார்கள்.
அவருக்கு ஸ்பெஷல் பிளாக் டீ........ 
நிறுத்தாமல் பேசிகொண்டே இருந்தார் அவரின் மலையாளமும் அழகாகத்தான் இருந்தது. இதற்கிடையில் நாஞ்சில்நாடன் அவர்களுக்கு சாகித்திய அகாதெமி விருது உருதிசெயப்பட்ட விஷயத்தை செல்வேந்திரன் அவர்கள் சொன்னார் எல்லோருக்கும் இரட்டிப்பு சந்தோஷம்.
நானும் அக்காவும் ஒரு ஓரத்தில் இருந்து அவர் பேச்சை கவனித்தோம். என் காதில் எந்த பேச்சும் விழவில்லை.....
அவரைப் பார்த்ததே சந்தோஷம் என்று நினைத்தேன். அவரின் புத்தகம் படித்ததே இல்லை, அவருடன் பேசியதில்லை எல்லாமே கேள்வி ஞானம் மட்டும்தான்......... அவரைப் பார்த்ததும் வந்த சந்தோஷத்திர்க்கு அளவே இல்லை..... ஒரு மாபெரும் எழுத்துக் கலைஞனை கண்ட சந்தோஷமாக இருக்கலாம், வாழ் நாளில் மறக்க முடியாத நாள், 2.30 மணியளவில் எல்லோரும் சாப்பிடப்போக தயாராகிவிட்டார்கள், ஜெயமோகனுடன் ஒரு Lunch , கடைசியில் ஜெயமோகனுடன் எல்லோரும் புகைப்படம் எடுத்துகொண்டோம், பிரியும் வேளையிலும் எங்களிடவும் விடைபெற்றார் அந்த கலைஞன். ஒரு நல்ல மனிதனை பார்த்த சந்தோஷத்தில் நான், எளிமையான தோற்றம், இடைவிடாத பேச்சு, மலயாளம் கலந்த தமிழ் மொழி, இவையெல்லாம் தான் அவரிடம் பிடித்திருந்த்து............
அவரைப் பார்த்த பிறகு தான் அவரின் படைப்புகளை படிக்க ஆசை உண்டாயிற்று.....மிக விரைவில் ஆரம்பிப்பேன்..........
த்யாகு சார் உங்களுக்கு ஓராயிரம் நன்றிகள் என்னையும் உங்கள் கூட்டத்திற்க்குள் சேர்த்தர்க்கு..
நன்றி.............
     நன்றி..........
           நன்றி............

நாஞ்சிலாரூக்கு பாராட்டு விழா..


சாகித்திய அகாடமிக்கு சிறப்பை தந்த
நம்ம நாஞ்சிலாரூக்கு ........
 பாராட்டு விழா .......

சென்னையில் ஜனவரி திங்கள் 3 ம் நாள்
ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் ,
மாலை 6 .30 மணிக்கு
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

சுஜாதாவின் படைப்புகள்

ப்ரியா
லண்டன், ஜெர்மனி தேசங்களுக்குப் போய் வந்த சூட்டோடு சுஜாதா குமுதத்தில் எழுதிய தொடர்கதை "ப்ரியா". ஒரு சினிமா நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் செல்கிறாள். அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட , அவளது கண்டிப்பான கார்டியன், லாயர் கணேஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார். லண்டனில் சதி, கொலை, கடத்தல் என அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் சிக்கித் திக்குமுக்காடும் கணேஷ், ஸ்காட்லண்ட் யார்டு போலீஸுடன் இணைந்து மிரட்டும் அசத்தலான நாவல். இது சினிமாவாக எடுக்கப்பட்டபோது ஏகப்பட்ட மாற்றங்களைச் சந்தித்து நாவலின் சுவாரஸ்யம் காணாமல் அடிக்கப்பட்டது தனிக் கதை. 


சிவந்தகைகள் 
 சிவந்த கைகள் சுஜாதாவின் மாத நாவல் விளையாட்டுகளில் "சிவந்த கைகள்" ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் காடர் போஸ்டில் வேலைக்கு நுழையும் இளைஞனொருவன் எளிதில் அடைய முடியாத அதன் உச்சபட்ச உயர் பதவி நோக்கி அதிர்ஷ்டவசமாக முன்னேறுகிறான். துரதிருஷ்டவசமாக அவன் மறைத்து வைத்திருக்கும் ஒரு சின்னக் களங்கம் அவனது லட்சியத்துக்கு முட்டுக்கட்டையாக வர நேரும்போது திடுக்கென அவன் தேர்ந்தெடுக்கும் வழிமுறை, செயல்பாடு, பிராயச்சித்தம் என சுனாமி வேக சுழல் கதை.


கொலை அரங்கம்


குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்தி-லிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று. 





அனிதா-இளம் மனைவி
‘அனிதா - இளம் மனைவி’ குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்கப்பட்ட வசீகரக் கதை. ஒரு பெரும் பணக்காரரின் இளம் வயது மனைவியைச் சுற்றி நடக்கும் இனம் புரியாத திகிலூட்டும் சம்பவங்களின் தொடர்ச்சி, லாயர் கணேஷை களத்தில் இறக்குகிறது. வஸந்த் உருவாகாத, இணைந்திராத காலகட்டத்தில் ஒரு தனி ஹீரோவாக கணேஷைச் சந்திப்பது திரில்லான அனுபவம்தான். ‘இது எப்படி இருக்கு’ என்கிற பெயரில் இந்த இளம் மனைவி திரைப்படமாகவும் வடிவெடுத்தாள். 


ஒரே ஒரு துரோகம்


ஒரே ஒரு துரோகம் 1983ல் ‘சாவி’ பத்திரிகையில் தொடர்-கதையாக வந்தது. உண்மைக்குப் பிரயத்தனப்படும் ஒரு பெண் பேராசிரியருக்கு, சுவாசமே பொய்யாக வாழ்க்கை நடத்தும் டகல்பாஜி ஒருவன் கணவனாகிறான் என்பதில் தொடங்கும் முரண்பாடான சுவாரஸ்யமான கதை, 25 வருடங்களுக்குப் பிறகு இன்றும் இளமையாக சுஜாதாவின் எழுத்து வன்மையில் வசீகரிக்கிறது. 



மாயா

 ‘சாவி’ ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் பிரசுரமானது ‘மாயா’. ஆசிரமம், ஹைடெக் சாமியார், கற்பழிப்பு புகார் தரும் இளம் பெண் பக்தை, கோர்ட் கேஸ் என எக்காலத்துக்கும் பொருந்தும் கதை. கணேஷ், வஸந்த் ஆஜராகும் சூப்பர் ஃபாஸ்ட் கதையும்கூட.







 ரோஜா
 
 கல்கி இதழில் வெளியான ரோஜா கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்தும் நேர்மையான ஓர் இன்ஸ்பெக்டரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே ஒரு வயதானவருக்கு நேரும் ஈடு செய்யமுடியாத ஓர் இழப்பு நம்மையும் சோகத்தில் மூழ்கடிப்பது சுஜாதாவின் தேர்ந்த எழுத்துக்கான வெற்றி





விடிவதற்குள் வா 
 தமிழகத்தின் மண்டைக்காடு என்கிற ஊரில் நடந்த மதக் கலவரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கதை கல்கியில் தொடர்கதையாக வந்தது.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் விடுமுறையில் ஊருக்குத் திரும்பும்போது அவன் மனைவியைக் காணவில்லை. தேடும்போது, பல்வேறு யூகங்களும் வதந்திகளும் சிக்குகின்றன. அதிலொன்று, ஊருக்குள் புகைந்து கொண்டிருக்கும் மதக் கலவரத்தைத் தூண்டிவிடுகிறது. தலைகள் உருளுகின்றன. உடல்கள் சரிகின்றன. பதைபதைக்க வைக்கும் ஒரு மரண சாகசம் ஆரம்பமாகிறது.

மலை மாளிகை


கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் ‘மலை மாளிகை’ ஆனந்த விகடனில் வெளியானது. ஓய்வுக்காகவும், பழைய கட்சிக்காரர் ஒருவரை சந்திப்பதற்காகவும் கொடைக்கானல் செல்கிறார்கள் கணேஷும் வஸந்தும். அங்கே தனிமையான மலை மாளிகையொன்றில் அவர்களுக்கு நேரும் விசித்திர அனுபவங்கள் திகைக்க வைக்கின்றன




தப்பித்தால் தப்பில்லை 

 ‘தப்பித்தால் தப்பில்லை’, ‘மேகலா’ மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் திட்டமிடுகிறான். ஒரு குற்றம் இழைத்துவிட்டு அதிலிருந்து தப்பிவிட்டால், செய்தது குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா?





முதல் நாடகம் : நாடகங்கள்
சுஜாதாவின் நாடகங்கள் தமிழின் முக்கியமான இலக்கிய சாதனைகள் என்று நான் நினைக்கிறேன். நாடகம் என்ற கலைவடிவின் மூன்று முக்கியமான சாத்தியக்கூறுகளை மிகச்சிறப்பாக நிரப்பியவை அவை. ஒன்று, நாடகம் நம் கண்முன்னால் ஒரு வாழ்க்கையை நிகழ்த்திக் காட்டுகிறது. வேறு எந்த கலைவடிவத்திலும் நாம் வாழ்க்கையை அபப்டியே ‘ரத்தமும் சதையுமாக’ கண்முன் காண்பதில்லை.
இரண்டு, நாடகம் என்பது அடிப்படையில் நடிகனின் கலை. நம் முன் ஒரு மனிதன் நிற்கிறான், அவன் வழியாக ஒரு கதாபாத்திரம் நிகழ்கிறது. இதுவே நாடகத்தின் அடிப்படை அற்புதம். நவீன நாடகங்கள் தவறவிடும் அம்சம் இதுவே. மூன்று, நாடகம் உரையாடலின் அதிகபட்ச சாத்தியங்களை பயன்படுத்த வாய்ப்புள்ள ஒரு கலை. இலக்கியத்தில் உரையாடல்கள் மிகச்சிறந்த பங்கை வகிக்கின்றன. ஆனால் உரையாடலின் நுட்பங்கள் அங்கே ஊகிக்கத்தான் படுகின்றன. குரலும், பாவனையும் இணையும்போது உருவாகும் உரையாடலின் நுண்ணிய அழகுகள் நாடகத்தில் வெளிப்படும் அளவு எந்தக்கலையிலும் வெளிப்பட முடியாது.
இந்த மூன்று அம்சங்களிலும் சுஜாதாவின் நாடகங்கள் மிக வெற்றிகரமானவை. -ஜெயமோகன்
நகரம்


 இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் பதினான்கு சிறுகதைகளும் 1972-73ம் வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. மிகச் சிறந்த கதையாக தேசிய அங்கீகாரம் பெற்றது, ‘நகரம்’. பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பாராட்டப்பட்ட கதையும்கூட.





தமிழ் நூல்கள்

                         ஜெயமோகன் படைப்புகள்

 ஏழாம் உலகம்
 நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்கு கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்துகொண்டிருக்கின்றன!
"ஏழாம் உலகம்" அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள், காதலிக்கிறார்கள் குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும் எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற "நான் கடவுள்" திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.


  மேற்குச்சாளரம்
இலக்கிய அழகியலுக்காக நாம் எப்போதும் மேற்குச் சன்னலை திறந்து வைத்திருக்கிறோம். பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா உலகமெங்கும் சென்றது, உலக இலக்கியங்களை எல்லாம் தன் மொழிகளில் கொண்டுவந்து குவித்தது. ஆகவே உலகை அறிய ஐரோப்பாவை நோக்கியே ஆகவேண்டும். இதுவும் அத்தகைய ஒரு முயற்சி ஆனால் வழக்கமாக எது அதிகமாகப் பேசபப்டுகிறதோ அதை மட்டுமே கவனிப்பது நம் வழக்கம். இந்நூல் பரவலாக பேசபப்டாத நூல்களைப் பற்றி பேசுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலான மாஸ்டர் கிறிஸ்டியன் (மேரி கொரெல்லி) முதல் சமகாலத்து நாவலான காண்டாக்ட் (கார்ல் சகன்) வரை, ஜப்பானிய நாவலான வுமன் ஆன் டியூன்ஸ் (கோபோ ஆப்) முதல் மத்தியக்கிழக்கு நாவலான பிரிட்ஜ் ஆன் தி டிரினா (இவோ ஆண்டிரிச்) வரை அதன் எல்லை விரிகிறது இந்நூல் அந்நாவல்களின் கதையை அழகிய சுருக்கமான சித்திரமாக அளிக்கிறது. அவற்றின் மீது வாசக மனம் திறக்கும்படி சில நுண்ணிய அவதானிப்புகளை நிகழ்த்துகிறது

நிகழ்தல் 
அனுபவங்களின் நிறங்கள் பிரியும் மகத்தான காட்சிகளை தொடர்ந்து உருவாக்குவதன் வாயிலாக ஒரு எழுத்தாளன் வாழ்வை விவரணை செய்ய முற்படுவதில்லை. மாறாக அறிய முடியாதெனெ விதிக்கபட்ட அதன் ரகசிய தருணங்களை நெருங்கிச் செல்ல இடையறாது விழைகிறான். அவ்வாறு நெருங்கிச் செல்லும்போது அந்த ரகசியம் இன்னும் பன்மடங்காக பல்கிப் பெருகிவிடுகிறதேயன்றி அவிழ்க்கப்படுவது இல்லை. அந்த வகையில் ரகசியங்களின், வாழ்வின் நுண்ணிய தருணங்களின் உற்பத்தியாளனாக ஒரு படைப்பாளி மாறிவிடுகிறான். ஜெயமோகனின் இந்த அனுபவக் கட்டுரைகள் ஆழ்ந்த விம்முதலை உருவாக்குபவை. நாம் புரிந்துகொள்ளாமல் கடந்துவந்துவிட்ட நமது நிழல்களை பேச வைப்பவை. மனிதர்களுக்குள் இடையறாது பெருகும் உணர்ச்சிகளின் நதியிருந்து ஒரு பொதுமையை கண்டடைபவை.

பண்படுதல் பண்பாட்டு விவாதங்கள்

நாம் ஒருவரை ஒருவர் பார்த்தால் Ôசாப்பிட்டாச்சா?Õ என்று கேட்கிறோம். விசித்திரமான இந்தப்பழக்கம் எப்படி நமக்கு வந்தது? சாப்பாடு அரிதாக இருந்த ஒரு காலகட்டம் நமக்கிருந்ததா? பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம் தேசத்தை பதற அடித்து பல லட்சம்பேர் சாகக் காரணமாக அமைந்த மாபெரும் பஞ்சங்களின் விளைவா அது? நம் பண்பாட்டின் ஆழத்தில் அதற்கான விடை இருக்கலாம். அந்த ஆழத்தை தேடிச்செல்லும் கட்டுரைகளும் விவாதங்களும் அடங்கியது இந்த நூல். பண்பாடென்பதே ஒரு விவாதம் என்பதனால் பேசும்தோறும் நாம் பண்பாட்டை உருவாக்குகிறோம். இந்நூல் பண்பாட்டுப்பிரச்சினைகளை, பண்பாடு என்னும் பிரச்சினையை பல கோணங்களில் விவாதிக்கிறது. நம்முடைய நீண்ட மரபின் பின்னணியிலும் இன்றைய நவீன யுகத்தின் பின்னணியிலும் இந்நூல் தன் ஆய்வுகளை விரித்துக்கொள்கிறது

 ஊமைச்செந்நாய்

சென்ற நான்கு வருடங்களில் நான் எழுதிய கதைகள் இந்தத் தொகுதியில் உள்ளன.இத்தொகுதியில் உள்ள கதைகளில் இப்போது நான் காணும் பொது அம்சம் 'கதை'தான்.இவற்றில் நுட்பமான யதார்த்தத்தளம் சார்ந்த ஆக்கங்கள் உண்டு. மிகைபுனைவுகளும் உண்டு. ஆனால் முழுக்க முழுக்க படைப்பூக்கத்தின் தற்செயலை நம்பி எழுதப்பட்டவை. அதனாலேயே ஆசிரியனும் விளக்கிவிட முடியாத பல தருணங்கள் கொண்டவை. செவ்வியலின் அடிப்படையான ஓர் இயல்பை இவற்றில் வாசகர் காணமுடியும். வரிகள்தோறும் செறிந்திருக்கும் கவித்துவ உட்குறிப்புகள்.தமிழ் நவீனகவிதைகள் அடைந்தவற்றைவிட அதிகமான கவித்துவப்படிமங்களை இந்த உரைநடை முன்வைத்துச் செல்கிறது.  
நலம் சில விவாதங்கள்



அறிவார்ந்த எந்த மனிதனும் தன் உடலைக் கூர்ந்து கவனிப்பவனாகவே இருப்பான் என்றார் காந்தி. மனித உடல் இப்பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள ஒரு நல்ல உதாரணம். தன் உடலை ஒருவன் புரிந்துகொள்ளும் அளவுக்கு எந்த மருத்துவரும் புரிந்துகொள்ள முடியாது. இந்நூல் உடலையும் உடலுடன் இணைந்த மனத்தையும் குறித்த விவாதங்கள் அடங்கியது. நம்முடைய சமகால மருத்துவப்பிரச்சினைகள் மாற்றுமருத்துவச் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு கோணங்களிலான உரையாடல்களை இது திறக்கிறது




தனிக்குரல்
ஒரு எழுத்தாளனின் பணி அனுபவங்களை தொகுப்பது மட்டுமல்ல. கருத்தாக்கங்களை உருவாக்குவதன் மூலமும் உரையாடலுக்கான கேள்விகளை தொடர்ந்து எழுப்புவதன் மூலமும் அவன் தனது சூழலை உயிர்ப்புடன் இயங்கச் செய்கிறான். அவன் தற்செயலாக, போகிற போக்கில் எழுப்புகிற கேள்விகள் மீண்டும் மீண்டும் பலராலும் பதில் சொல்லப்பட்டு நிரந்தரம் பெற்று விடுகின்றன. அந்த வகையில் ஜெயமோகன் தனது பேச்சுகளின் ஊடாக முன்வைத்த பல கருத்துகள் கடந்த இருபதாண்டுகளில் நவீன தமிழ் இலக்கிய சூழலின் தொடர்ச்சியான பேசுபொருளாக இருந்திருக்கின்றன. கடும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் உருவாக்கி இருக்கின்றன. சில சமயம் அவை தர்க்கத்தின் பாற்பட்டவை. சில சமயம் காழ்ப்பின் வழி நிற்பவை. இந்தத் தொகுதியில் ஜெயமோகன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆற்றிய உரைகள் இடம்பெறுகின்றன. அவை பல்வேறு கலை இலக்கிய, சமூக பிரச்சினைகளை     தீவிரமாக விவாதிக்கின்றன.


சிலுவையின் பெயரால்
கிறித்தவத்தை இரண்டுவகையாகப் பிரிக்கலாம். கிறிஸ்துவுக்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகழித்து ரோமப்பேரரசர் கான்ஸ்தன்தீன் அவர்களால் கூட்டப்பட்ட சபைகள் மூலம் திட்டவட்டமாக ஒருங்கமைக்கப்பட்ட கிறிஸ்தவம் ஒன்று. இன்றுள்ள எல்லாத் திருச்சபைகளும் அந்த அமைப்பில் இருந்து முளைத்து வந்தவையே. அவை கிறிஸ்துவை ஒரு இறைமகனாக மட்டுமே முன்வைக்கின்றன. அவர் விண்ணுலகுக்கு வழிகாட்டவந்தவர் என்று சொல்கின்றன. அவர் மட்டுமே ஒரே மீட்பர் என்று சொல்லி மத ஆதிக்கத்தை உலகமெங்கும் கொண்டுசென்று பரப்ப முயல்கின்றன இன்னொரு கிறிஸ்தவம் உண்டு. அது ஞானவாத கிறித்தவம் எனப்படுகிறது. கிறிஸ்துவை ஒரு மாபெரும் ஞானகுருவாகக் கருதுவது அது.

ஜெயமோகன் சிறுகதைகள் 

மனித வாழ்க்கையின் அடிப்படைகளை நோக்கிய அந்தரங்கமான உணர்ச்சிபூர்வமான தேடலை உள்ளடக்கிய கதைகள் இவை. அத்தேடலை அன்றாட வாழ்க்கையிலிருந்து தத்துவத்திலும், வரலற்றிலும், அறிவியலிலும் விரித்துக் கொள்பவை. ஆகவே பலவகையான கதைக்கருக்களும் கதைக்களங்களும் கூறுமுறைகளும் கொண்ட வண்ணமயமான கதையுலகமாக உள்ள தொகுப்பு இது. எல்லாக் கதைகளும் அடிப்படையில் கதை என்ற வடிவைத் தக்கவைத்தபடி வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்ட நவீன ஆக்கங்கள். இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத பல கதைகளை உள்ளடக்கிய முழுமையான தொகுப்பு இது. 

  முன்சுவடுகள்



 நாம் நடந்துசெல்லும் இந்தப்பாதையில் ஏராளமான பாதச்சுவடுகள். நாம் அவற்றை கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் செல்கிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு எச்சரிக்கைகள், ஒவ்வொரு பாடங்கள். இலக்கியத்தில் சுயசரிதைகள் மற்றும் வாழ்க்கை வரலாறுகளுக்கு வரும் முக்கியத்துவம் இவ்வாறுதான் உருவாகிறது. இந்நூல் பல்வேறு வாழ்க்கை வரலாறுகளில் உள்ள ஆர்வமூட்டும் பகுதிகளை எடுத்து சுருக்கமாக மறு ஆக்கம்செய்து அளிக்கிறது. விதவிதமான வாழ்க்கைகள்: வழியாக கடந்துசெல்லும் வண்ணமயமான அனுபவத்தை அளிக்கிறது இது.
   
ஜெயமோகன் குறுநாவல்கள்

இத்தொகுதியில் உள்ள குறுநாவல்கள் சிறுகதைக்குரிய வேகமான கதையோட்டத்துடன் நாவலுக்குரிய விரிவான சித்தரிப்பும் கொண்டவை. இக்கதைகள் விதவிதமான நிலக்காட்சிகளின் வழியாக வேறுபட்ட வாழ்க்கைகளைக் கண்டபடி பயணம் செய்யும் அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத குறுநாவல்கள் பல உள்ள முழுமையான தொகுப்பு இது.